'தினத்தந்தி'-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி தொடங்கியது


தினத்தந்தி-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி தொடங்கியது
x

‘தினத்தந்தி’- எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி நேற்று நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டபோது எடுத்த படம். எஸ்.ஆர்.எம். குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் (ராமாபுரம், திருச்சி) தலைவர் நிரஞ்சன், நெல்லை லட்சுமி மாதவன் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் மதுபாலா, ஆல்பா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சாம்சன் பால்ராஜ், நெல்லை ‘தினத்தந்தி' மேலாளர் த.ஜனார்த்தனன் ஆகியோர் உள்ளனர்.

தினத்தந்தி 23 April 2023 2:29 AM IST (Updated: 23 April 2023 2:32 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் 'தினத்தந்தி'- எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திருநெல்வேலி

பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் அடுத்ததாக என்ன பட்டப்படிப்பை தேர்வு செய்து படிப்பது என்று முடிவெடுக்கும் இந்த தருணம் மிகவும் முக்கியமானதாகும். மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும் அந்த முடிவை சரியாக எடுக்க வேண்டும்.

'தினத்தந்தி'- எஸ்.ஆர்.எம். கல்வி கண்காட்சி

பிளஸ்-2 முடித்த பிறகு எந்த துறையை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்து கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் 'தினத்தந்தி'- எஸ்.ஆர்.எம். இணைந்து கல்வி கண்காட்சியை நடத்துகிறது.

இந்த கல்வி கண்காட்சி நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று காலை தொடங்கியது. இந்த கண்காட்சியில் மருத்துவம், என்ஜினீயரிங், பல்மருத்துவம், கலை மற்றும் அறிவியல், ஓட்டல் நிர்வாகம், காட்சி ஊடகம், கடல்சார் படிப்பு, பயர் சேப்டி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்ற முன்னணி கல்வி நிலையங்களின் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு படிப்பிலும் பின்பற்றப்படும் பாடத்திட்டங்கள், அதற்குரிய வேலைவாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

கல்வி ஆலோசனைகள்

தொடக்க விழாவில் எஸ்.ஆர்.எம். குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் (ராமாபுரம், திருச்சி) தலைவர் நிரஞ்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லை லட்சுமி மாதவன் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் மதுபாலா, எஸ்.ஆர்.எம். குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் (ராமாபுரம், திருச்சி) இயக்குனர் டாக்டர் கதிரவன், ஆல்பா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சாம்சன் பால்ராஜ், நெல்லை 'தினத்தந்தி' மேலாளர் த.ஜனார்த்தனன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

நிகழ்ச்சியில் தவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேஷன் இயக்குனர் டேனியல் கே.பிள்ளை, மேலாளர் ராஜேஷ் முருகன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சரவணன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சுதாகர், கல்வி ஆலோசகர் ராஜா செல்வபெருமாள் மற்றும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் கல்வி ஆலோசனை வழங்கினர்.

50-க்கும் மேற்பட்ட அரங்குகள்

கண்காட்சியில் ராமாபுரம், திருச்சி எஸ்.ஆர்.எம். குரூப் ஆப் இன்ஸ்டிடியூட்ஸ், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, ஸ்காட் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி, இந்துஸ்தான் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், ஆல்பா என்ஜினீயரிங் கல்லூரி, அமெட் பல்கலைக்கழகம், அப்பல்லோ கல்வி நிறுவனங்கள், சேது பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்,

சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஆலடி அருணா குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், சென்னை ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி, மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி குழும கல்லூரிகள், சென்னை பாரத் உயர்கல்வி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஜாய் பல்கலைக்கழகம், சோனா குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், வெற்றி ஐ.ஏ.எஸ். ஸ்டடி சர்கிள், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி, பிரின்ஸ் இன்ஸ்டிடியூசன்ஸ்,

முத்தமிழ் என்ஜினீயரிங் கல்லூரி, அசெட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜிஸ், எஸ்.சி.எஸ்.வி.எம்.வி. நிகர்நிலை பல்கலைக்கழகம், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி, கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ், துளசி மகளிர் சட்டக் கல்லூரி, பிளை ஏர் ஏவியேசன் அகாடமி,

ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி, ஸ்ரீ கலைமகள் மெடிக்கல் அகாடமி, கிங்ஸ் மெடிக்கல் அகாடமி, மோனோலித் ரிசர்ச் அன்ட் டிரெய்னிங் லேப் பிரைவேட் லிமிடெட், அதியமான் பொறியியல் கல்லூரி, சென்னை அமித் குளோபல் பிசினஸ் ஸ்கூல், வடபழனி அரினா அனிமேஷன், தவோ மெடிக்கல் ஸ்கூல், பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் அரங்குகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் ஆர்வமுடன் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு அரங்குக்கும் சென்று தாங்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பது பற்றிய ஆலோசனைகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

குறிப்பாக மருத்துவம், என்ஜினீயரிங், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங், கடல்சார் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகள் பற்றியும், அவற்றில் சேர்ந்து படிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். அவர்களுக்கு அந்த அரங்குகளில் இருந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் தெளிவான விளக்கம் அளித்தனர். மேலும் நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் வல்லுனர்கள் விளக்கி கூறினார்கள்.

கட்டண சலுகைகள், உதவித்தொகை

ஒவ்வொரு பட்டப்படிப்பில் சேருவதற்கு பிளஸ்-2 வகுப்பில் என்ன பாடம் படித்திருக்க வேண்டும்?, எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்? என்பன உள்ளிட்ட கல்வித்தகுதிகளையும், கட்டண சலுகைகள், உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் போன்ற விவரங்களையும், கண்காட்சி அரங்கில் தெளிவுபடுத்தி கொள்ளலாம்.

மேலும் தேசிய அளவில் நடத்தப்படும் உயர்கல்விக்கான நுழைவு தேர்வுகள், அவற்றை எழுதுவதற்கான பயிற்சி குறித்தும் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் சென்று படிக்க கூடிய தகவல்களும் கண்காட்சியில் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களைப் பற்றிய துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஒரே இடத்தில் பயனுள்ள தகவல்கள்

நெல்லை லட்சுமி மாதவன் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் மதுபாலா கூறுகையில், 'இந்த கல்வி கண்காட்சியை 'தினத்தந்தி' நிர்வாகம் தொடர்ந்து நடத்துவது பாராட்டுக்குரியது. பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பது? என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இங்கு மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் எந்த கல்லூரியில் படிக்கலாம்? எவ்வளவு கட்டணம்? போன்ற தகவல்கள் ஒரே இடத்தில் மாணவர்களுக்கு கிடைப்பது மிகவும் பயனுள்ளதாகும். இந்த கண்காட்சியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த கண்காட்சியை தொடர்ந்து நடத்தும் 'தினத்தந்தி'க்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

கல்வி பணி

ஆல்பா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சாம்சன் பால்ராஜ் கூறுகையில், ''மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை ஊட்டும் வகையில் 'தினத்தந்தி' நிர்வாகம் பத்திரிகையில் பல்வேறு பகுதிகளை வெளியிட்டு வருகிறது. 'தினத்தந்தி' அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வந்தார். அத்துடன் கல்வி பணி, ஆன்மிக பணி என அனைத்து பணிகளையும் செய்து வந்தார்.

இந்த நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற கல்வி கண்காட்சியில் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் அனைத்து படிப்புகளையும் எந்தெந்த கல்லூரிகளில் எப்படி படிக்கலாம்? எவ்வளவு கட்டணம்? என்பதை மாணவர்களுக்கு கூறுவது மிகவும் பயனுள்ளதாகும். இதற்காக அந்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

இன்று நிறைவு

கல்வி கண்காட்சியின் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம் ஆகும்.


Next Story