தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

கால்வாயில் முளைத்துள்ள செடி-கொடிகள்

கரூர் மாவட்டம், நடையனூர் பகுதியில் அந்த வழியாக உபரிநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் வழியாக அந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. இந்நிலையில் இந்த உபரிநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக இந்த உபரி நீர் கால்வாய் நெடுகிலும் பல்வேறு வகையான செடி, கொடிகள் கால்வாயில் முளைத்து தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் கால்வாய் வழியாக செல்லும் உபரி நீர் மற்றும் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உயரமான தடுப்பு சுவர் வேண்டும்

கரூர் மாவட்டம், தவுட்டுபாளையம் காவிரி ஆற்று பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும்போது காவிரி ஆற்றுப்பகுதியில் குடியிருக்கும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்று பாலம் முதல் நெடுகிலும் உயரமான தடுப்பு சுவர் அமைத்துக் கொடுத்து காவிரி ஆற்றில் வரும் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்ற சுகாதார வளாகம்

கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அந்த சுகாதார வளாகத்தை அப்பகுதியில் உள்ள பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சுகாதார வளாகத்திற்குள் உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சுகாதார வளரத்துக்குள் கழிவுநீர் தேங்கிநின்றது. இதன் காரணமாக அப்பகுதி பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்தாமல் உள்ளனர். இதனால் சுகாதார வளாகம் முழுவதும் பல்வேறு செடி, கொடிகள் முளைத்துள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்து காணப்படும் சுகாதார வளாகத்தின் குழாய்களை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், கட்டிபாளையத்தில் இருந்து கரைப்பாளையம் செல்லும் தார் சாலை ஓரத்தில் அந்த பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் வெளியேறும் வகையில் அந்த பகுதியில் கால்வாய் வெட்டப்படாததால் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த தார் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே உள்ளாட்சிதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தங்குதடையின்றி செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உடைந்த பாலம்

கரூர் மாவட்டம், கோம்புப்பாளையத்தில் அப்பகுதி மக்கள், விவசாயிகளின் நலன் கருதி புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் காவிரி ஆற்றிற்கு சென்று குளித்தும், துணிகளை துவைத்தும் வருகின்றனர். அதேபோல் இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான காவிரி கரையோரம் உள்ள விவசாயத் தோட்டங்களுக்கு இடு பொருட்களை கொண்டு சென்றும், விளைபொருட்களை கொண்டு வருகின்றனர். பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் வாய்க்காலின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்புச் சுவர் முன்பகுதி உடைந்துள்ளது. இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் விழும் சூழ்நிலையில் அந்த பாலம் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்து இடிந்த நிலையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story