தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்மாற்றி
விருதுநகர் பாண்டியன் நகரில் கழிவு நீர் வாய்க்கால் அருகே உள்ள மின்மாற்றியின் தூண்கள் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. விபரீதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னதாக மின்மாற்றியில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், பாண்டியன் நகர்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராஜபாளையம்.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சூரார்பட்டியில் இருந்து மஞ்சள் ஓடைப்பட்டி வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துகளும் நிகழ்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, வெம்பக்கோட்டை.
பொதுமக்கள் அச்சம்
விருதுநகர் அருகே கடம்பன்குளத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கதொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகே குடியிருப்புகள் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். ஆதலால் விபரீதம் ஏதும் நேர்வதற்கு முன்பாக நீர்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், கடம்பன்குளம்.
புதர்மண்டி கிடக்கும் நூலகம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ராமலிங்கபுரத்தில் உள்ள நூலகத்தை சுற்றி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளதால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே நூலகத்தை சுற்றி உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சுழி.
விபத்து அபாயம்
விருதுநகர் ரெயில்வே பீடர் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. மழை பெய்தால் பள்ளங்களில் நீர் நிரம்பி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளிலும் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயச்சந்திரன், விருதுநகர்.
வாருகால் தூர்வாரப்படுமா?
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தின் மாவூத்து விலக்கில் இருந்து தம்பிபட்டி கண்மாய் வரை உள்ள வாருகால் தூர்வாரப்படாததால் மழைக்காலத்தில் மழைநீரானது சாலையில் செல்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள வாருகாலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, தம்பிபட்டி.
கொசுக்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகரில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தேங்கிய நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. ஆதலால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயநிலை நிலவுகிறது.. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி கழிவுநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈஸ்வரன், காரியாபட்டி.
நடவடிக்கை தேவை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் தேவராஜ் காலனியில் தெருவிளக்குகள் இல்லை. முறையான வாருகால் வசதியில்லாததால் கழிவு நீர் தேங்கி சுகாதார கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. முறையான சாலை வசதி இல்லாததால் மழை பெய்தால் சாலையானது சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. அடிப்படை வசதிகள் ஏதுமின்றி உள்ள இப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், சிவகாசி.
மயான சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட சித்துராஜபுரம் பஞ்சாயத்தில் அய்யனார்காலனி உள்ளது. இங்கு உள்ள அனைத்து சமுதாய மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மயானத்தில் தேவையற்ற செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் மயானத்தின் உள்ளே பாம்புகள் அதிகளவில் நடமாடி வருகிறது. இதனால் இறுதி சடங்கு செய்ய செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. மேலும் மயானத்தின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமுத்திரம், சித்துராஜபுரம்.