திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: நிலத்தை ஆக்கிரமித்து மிரட்டுவதாக போலீசாரின் காலில் விழுந்து அழுத தம்பதி


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: நிலத்தை ஆக்கிரமித்து மிரட்டுவதாக போலீசாரின் காலில் விழுந்து அழுத தம்பதி
x

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தை ஆக்கிரமித்து மிரட்டுவதாக போலீசாரின் காலில் விழுந்து அழுத தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

தம்பதி கதறல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் மனு கொடுத்தனர்.

அப்போது நிலக்கோட்டையை அடுத்த மன்னவராதியை சேர்ந்த தெய்வமுருகன் (வயது 45), அவருடைய மனைவி மணிமேகலை (40) ஆகியோர் மனு கொடுக்க வந்தனர். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் நின்ற போலீசாரின் காலில் விழுந்தனர். பின்னர் தங்களுடைய நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததோடு தங்களையும் மிரட்டுவதாக கூறி கதறி அழுதனர். மேலும் நிலத்தை மீட்டு கொடுப்பதுடன், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார் கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story