அரசு பள்ளியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய விவகாரம்: பள்ளி தலைமையாசிரியை- ஆசிரியர் பணியிடை நீக்கம்


அரசு பள்ளியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய விவகாரம்: பள்ளி தலைமையாசிரியை- ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 19 Jun 2022 5:37 PM GMT (Updated: 19 Jun 2022 6:09 PM GMT)

நச்சலூர் அருகே அரசு பள்ளியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கரூர்

பள்ளியில் பிறந்தநாள் விழா

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், பொய்யாமணி ஊராட்சி, நச்சலூர் அருகே பங்களாபுதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவருக்கு கடந்த 16-ந்தேதி பிறந்தநாள் ஆகும். இதையடுத்து தனது பிறந்தநாளை பள்ளியின் ஒரு வகுப்பறையில் சக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி ஆசிரியர் மணிகண்டன் கொண்டாடியுள்ளார். அப்போது கேக் துண்டை அந்தப்பள்ளியின் தலைமையாசிரியை சித்ரா தேவி உள்பட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆசிரியர் மணிகண்டனுக்கு ஊட்டி விட்டதாக கூறப்படுகிறது.

பணியிடை நீக்கம்

இந்த பிறந்தநாள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இது தொடர்பாக தகவல் அறிந்த குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டியதற்காக பள்ளி தலைமை ஆசிரியை சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கரூர் மாவட்ட ஆசிரியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்கும் அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர்களுக்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனத்ைத தெரிவித்து வருகின்றனர்.


Next Story