மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் பணி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் பணி
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் பணியை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு அவ்வப்போது தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பு, உறுதித்தன்மை குறித்து நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் பணி

இந்திய தேர்தல் ஆணையம், விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்து 580 எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கண்ட்ரோல் யூனிட்), 1,180 எண்ணிக்கையிலான வாக்காளர் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் (வி.வி.பேட்) ஆகியவற்றை அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்து மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு எந்திரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்பாக மாறுதல் செய்யப்பட உள்ளது. இந்த எந்திரங்களை வழங்குவதற்கு முன்னேற்பாடாக அவற்றை ஸ்கேன் செய்து, எண்ணிடப்பட்டு தயார் நிலையில் வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கோவர்தனன், விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் மற்றும் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தயா.இளந்திரையன், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story