குடிநீர் தொட்டி அமைக்கும் பணிக்கு இடையூறு; 2 பேர் மீது வழக்கு

பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மில் அருகில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுத்து மக்களுக்கு வினியோகம் செய்வதற்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடந்தன. இதற்காக அங்கு மோட்டார் வைப்பதற்காக கட்டிடம் கட்டப்பட்டது.
இந்நிலையில், அந்த கட்டிடத்தை தேனியை சேர்ந்த காளிராஜ் மகன் கோபி என்பவர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து சேதப்படுத்தியதோடு, பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், பழனிசெட்டிபட்டியில் தனியார் மருத்துவமனை அருகில் குடிநீர் தொட்டிக்கான தூண் அமைக்கும் பணிக்காக கட்டைகள் கட்டப்பட்டு இருந்தது. இதனை, அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் சரவணன் என்பவர் காரை கொண்டு மோதி சேதப்படுத்தியதோடு, குடிநீர் தொட்டி அமைக்கும் பணிக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், சரவணன் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.