மாவட்டத்தில் ரூ.2 கோடியில் 31 ஏரிகளில் தூர்வாரும் பணி

மாவட்டத்தில் ரூ.2 கோடியில் 31 ஏரிகளில் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
விவசாயிகளின் பாசனத்திற்கு உரிய நேரத்தில் தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க ஏதுவாக பருவமழைக்கு முன் ஆறுகள், ஏரிகள் மற்றும் அணைக்கட்டுகளின் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
சிறப்பு தூர்வாரும் பணி
அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் 13,496.31 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் 31 ஏரிகளில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகள் வருகிற 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.
கோடை காலத்திலேயே இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பணிக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூர்வாரும் பணியை கண்காணிக்க தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் சிறப்புக் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உழவர் குழுக்கள்
இச்சிறப்பு தூர்வாரும் பணியின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் முன்னோடி விவசாயிகள், நீர்வளத்துறை உதவிப்பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர், தொடர்புடைய கிராமத்தின் ஊராட்சிச் செயலர் ஆகியோரை உள்ளடக்கிய உழவர் குழுக்கள் உதவி வேளாண்மை அலுவலரின் ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட உள்ளன.
இக்குழுவானது வாட்ஸ் ஆப் குழுவின் மூலம் சிறப்பு தூர்வாரும் பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்கள், பணிகளின் தரம் அல்லது தாமதம் குறித்த புகார்களைப் பெறுதல், எதிர்காலப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் பணிகளை சுமூகமாக நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
கண்காட்சி
முன்னதாக, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் 250-க்கும் மேற்பட்ட வகையிலான பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் காய்கறிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் கார்கேம் பார்வையிட்டார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.