கடும் பனிப்பொழிவால் வாகனங்களை இயக்க திணறும் ஓட்டுனர்கள்

வேலூரில் அதிகரிக்கும் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் திணறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பனிப்பொழிவு
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களில் சற்று குறைவாக இருந்தாலும், வயல்வெளிகள், புறவழி சாலைகளில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. சூரியன் உதித்த பின்னரும் பனி குறையாமல், பகல் 10 மணிக்கும் மேலாக நீடிக்கின்றது.
இரவில் அதிகரித்து காலை வரை நீடிக்கும் பனிப்பொழிவு, நகரங்களையும், சாலைகளையும், வயல் வெளிகளையும் கண்ணுக்கு புலப்படாத வகையில் மூடி விடுகின்றது. இதனால் சாலைகளில் முன்னே செல்லும் வாகனங்களையும், பின்னால் தொடர்ந்து வரும் வாகனங்களையும் காண முடியாதவாறு பனி மறைக்கிறது.
வாகன ஓட்டிகள் திணறல்
இதனால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, வேகத்தை குறைத்து மெதுவாக சென்றனர். நகரங்களில் கட்டிடங்களை கண்ணுக்கு தெரியாத வகையில் பனி மறைத்தது. இதனால் வேலூர் கோட்டையில்பனியில் மறைந்தது.
பனிப் பொழிவு காரணமாக கடுங்குளிர் வாட்டுகிறது. இதனால் பொதுமக்கள் கம்பளி போர்வைகளையும், குல்லாக்களையும் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளும், முதியவர்களும் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.