மாவட்டத்தில் படிப்பை பாதியில் விட்ட5 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் படிப்பை பாதியில் விட்ட 5 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகளை மீண்டும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-ஈரோடு மாவட்டத்தில் படிப்பை பாதியில் விட்ட 5 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகளை மீண்டும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இடைநின்ற மாணவ-மாணவிகள்
தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டு இடைநின்ற மாணவ-மாணவிகளை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்து அவர்களுக்கு கல்வி அளிக்கும் முயற்சியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்து உள்ளது. அதன்படி மாவட்டம் தோறும் பள்ளி இடைநின்ற மாணவ-மாணவிகள், பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு ஓடிய மாணவ-மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அவர்களை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வீடு வீடாக தேடிச்சென்று மீண்டும் பள்ளிக்கூடங்கள் சேர்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அதிகாரி ஜி.ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் கடந்த 10-ந் தேதி முதல் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து அவர்கள் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர அறிவுரை வழங்கி வருகிறார்கள். பெற்றோர்களையும் சந்தித்து அவர்கள் பேசி வருகிறார்கள்.
5,300 பேர்
நேற்று ஈரோடு திருநகர்காலனி, ராஜாஜி புரம் பகுதிகளில் பள்ளி இடைநின்ற மற்றும் படிப்பை பாதியில் விட்ட மாணவர்களை உதவி திட்ட அதிகாரி ஜி.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திராவிட மணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் மயில்சாமி, ஆசிரிய பயிற்றுனர்கள் கோமதி, பிரியா, கார்த்தி, சுகன்யா ஆகியோர் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சந்தித்து கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.
இதுகுறித்து உதவி திட்ட அதிகாரி ஜி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை எடுக்கப்பட்டு உள்ள கணக்கெடுப்பின் படி 6 வயது முதல் 18 வயது வரையான அதாவது 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட மாணவ-மாணவிகள் 5 ஆயிரத்து 300 பேர் உள்ளனர்.
தொழில் கல்வி
இவர்கள் அனைவரையும் வரும் கல்வி ஆண்டில் மீண்டும் கல்வி கற்க வைக்கும் நோக்கத்தில் இந்த பணி நடந்து வருகிறது. ராஜாஜிபுரம், திருநகர் காலனி ஆகிய பகுதிகளில் மட்டும் 25 மாணவர்களை சந்தித்தோம். இவர்கள் 10-ம் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மீண்டும் பள்ளிக்கூடம் செல்லாமல் வீணாக சுற்றி வருகிறார்கள். சிலர் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். போதிய கல்வி மற்றும் அனுபவம் இல்லாமல் இந்த இளைய தலைமுறையினர் வாழ்க்கை தவறான பாதைக்கு சென்று விடாமல் இருக்க, மீண்டும் கல்வி வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்வதாக அவர்களிடம் உறுதி அளித்து இருக்கிறோம்.
10-ம் வகுப்பு தேர்வினை மீண்டும் எழுத விரும்பாத மாணவர்கள் அரசு தொழில் பயிற்சி மையத்தில் (ஐ.டி.ஐ.) இலவசமாக சேர்ந்து படிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்வதையும் கூறி இருக்கிறோம். 18 வயது வரை உள்ள இளைஞர்கள்-இளம்பெண்கள் கண்டிப்பாக பள்ளிப்படிப்பு, தொழில் கல்வியை முடிக்க தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் அனைத்து வாய்ப்புகளையும் வழங்குகிறது. இதனை பெற்றோருக்கும் விழிப்புணர்வாக கூறி இருக்கிறோம். வருகிற மே மாதம் மீண்டும் அந்தந்த பகுதி பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் மூலம் இடைநின்ற மாணவர்கள் பள்ளி அல்லது தொழில் பயிற்சியில் சேர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உதவி திட்ட அதிகாரி ஜி.ராதாகிருஷ்ணன் கூறினார்.