போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார குறும்படம்: முதல்-அமைச்சர் வெளியிட்டார்


போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார குறும்படம்: முதல்-அமைச்சர் வெளியிட்டார்
x

அமலாக்கப்பணியகம்-குற்றப்புலனாய்வு துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார குறும்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கத்தில் "போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனைத்தொடர்ந்து போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகியவற்றை இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமலாக்கப்பணியகம் - குற்றப்புலனாய்வு துறையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

பிரசார குறும்படம்

இந்த புதிய பிரிவு உருவாக்கப்பட்டதன் மூலம் 'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை எளிதாகும். போதை ஒழிப்பு தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, தன்னார்வலர்கள் "அமலாக்கப்பணியகம் - குற்றப்புலனாய்வு துறை" இணையதளம் வாயிலாக பங்கேற்கும் 30 மணிநேர விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம், தன்னார்வலர்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இணையதளம் வழியாகவும், நேரடியாகவும் தொடர்ந்து 30 மணி நேரம் மேற்கொள்வார்கள். அமலாக்கப்பணியகம் - குற்றப்புலனாய்வு துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார குறும்படத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மாணவர்களுக்காக...

போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் இந்த விழிப்புணர்வு குறும்படம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்காக திரையிடப்பட்டது. போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி தர்மபுரியில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார்.

உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குனர் (குற்றம்) மகேஷ்குமார் அகர்வால், காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story