பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்கக்கோரி துரை வையாபுரி வழக்கு

பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்கக்கோரி துரை வையாபுரி தொடர்ந்த வழக்கில் தென்காசி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வையாபுரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா, ஏ.கரிசல்குளம் கிராமத்தில் கடந்த 2016-17-ம் ஆண்டில் 423 விவசாயிகள் 895 எக்டேர் பரப்பளவில் சோளம் பயிரிட்டனர். இந்த பயிர்களை மத்திய அரசு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரத்து 652-க்கு இன்சூரன்ஸ் செய்து, அதற்கான தவணைத்தொகை ரூ.4 லட்சத்து 32 ஆயிரத்து 334 செலுத்தினோம். இந்த தொகை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் செலுத்தப்பட்டது.
விளைச்சல் பாதிப்பின் காரணமாக இன்சூரன்ஸ் தொகையை வழங்க விண்ணப்பித்தோம். இது தொடர்பான அறிவிப்பில் ஏ.கரிசல்குளம் என்பதற்கு பதிலாக கே.கரிசல்குளம் என்றும், 895 எக்டேர் பரப்பளவு என்பதற்கு பதிலாக 95 எக்டேர் என்றும் தவறுதலாக குறிப்பிடப்பட்டுவிட்டது. இதனால் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியாமல் பல ஆண்டுகளாக விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கான பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் ஆகியோர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
=========