கோர்ட்டில் வழக்கு விசாரணையின் போது போலீசார் சாட்சிகளை காலதாமதம் இன்றி ஆஜர்படுத்த வேண்டும்

கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது போலீசார் சாட்சிகளை காலதாமதம் இன்றி ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது, சாட்சிகளை போலீசார் காலதாமதம் இன்றி ஆஜர்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி நகரம் மற்றும் ஊரக உட்கோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கோர்ட்டில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்குகளில் சாட்சிகளை விரைந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணையை துரிதப்படுத்துவது தொடர்பாக, கோர்ட்டு வழக்கு விசாரணை கண்காணிப்பு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.
சாட்சிகள்
அப்போது, சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோர்ட்டு விசாரணையில் உள்ள வழக்குகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வழக்கு விசாரணையில் சாட்சிகளை காலதாமதம் இன்றி ஆஜர்படுத்த வேண்டும். கோர்ட்டு விசாரணை விரைவாக நடைபெறுவதற்கு போலீசார் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
தொடர்ந்து கோர்ட்டு வழக்கு விசாரணை கண்காணிப்புக்கான இணையதள தரவு தளத்தை உருவாக்கிய தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி, அழைப்பாணைகளை சார்பு செய்து சாட்சிகளை காலதாமதம் இல்லாமல் ஆஜர்படுத்தி கோர்ட்டு விசாரணை விரைவாக நடைபெற உதவியாக இருந்து பணியாற்றிய தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலைய ஏட்டு சுடலைமுத்து, வடபாகம் போலீஸ்காரர் வேல்முருகன் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.