மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய அலைக்கழிப்பு

கணியூர் மின் வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் மீட்டர்கள்
வீடு மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.இதனால் பல இடங்களில் வீடு ஒருவருடைய பெயரிலும், மின் இணைப்பு மற்றொருவர் பெயரிலும் இருந்து வருகிறது.இறந்து பல ஆண்டுகள் கடந்த தாத்தா, பாட்டி பெயரிலிருக்கும் மின் இணைப்புகளைக் கூட பெயர் மாற்றாமல் பலரும் பயன்படுத்தி வந்தனர். ஒருசில இடங்களில் விற்பனை செய்யப்பட்ட வீடுகளில் கூட பழைய உரிமையாளரின் பெயரில் மின் இணைப்பு இருந்து வருகிறது. தற்போது டிஜிட்டல் மீட்டர்கள் உள்ளிட்ட வசதிகளுடன் மின் இணைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சியில் மின் வாரியம் இறங்கியுள்ளது.
அலைக்கழிப்பு
இதனையடுத்து வீடு மற்றும் பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளில் கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் செய்யும் வகையில் சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து ரூ 726 கட்டணமாக செலுத்தினால் உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்படும். ஆனால் கணியூர் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கணியூர் மின்வாரிய அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் கூறி மறுநாள் வரச் சொல்லி பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் செல்வதால் அலைச்சல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதனால் உடனடி பெயர் மாற்றம் என்ற மின் வாரியத்தின் நோக்கம் கேள்விக்குறியாக மாறி விடுகிறது.சிறப்பு முகாம் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உடனுக்குடன் பணிகளை முடித்து பொதுமக்களின் அலைக்கழிப்பைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.
வருகிற 24-ந்தேதி கடைசி
கடந்த ஜூலை 24-ந்தேதி தொடங்கிய சிறப்பு பெயர் மாற்ற முகாம் மின் வாரியத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் ஒரு மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தில் பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிற 24-ந்தேதி வரை முகாம் நடைபெறவுள்ளது.எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.