சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டு உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023-ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது. இதை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்
தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30.9.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும் இந்த இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.