தொடர்ந்து உயரும் முட்டை விலை


தொடர்ந்து உயரும் முட்டை விலை
x
திருப்பூர்

போடிப்பட்டி

முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ரூ.5 ஐக்கடந்துள்ளதால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முட்டை கோழிப் பண்ணைகள்

அசைவப்பிரியர்களின் உணவில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு. மேலும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல பெற்றோர் தினசரி உணவில் முட்டையை இடம் பெறச்செய்கின்றனர். ஏனென்றால் வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, இ என அனைத்தும் கொண்ட உணவு வகை என்பதாலும் குறைந்த விலை அசைவ உணவு என்பதாலும் பலராலும் விரும்பப்படும் உணவாக முட்டை உள்ளது. முட்டைகளில் கோழிமுட்டை, வாத்துமுட்டை, காடைமுட்டை, வான்கோழிமுட்டை என பல வகை முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் கோழிமுட்டை அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.

இதில் பண்ணைக்கோழி முட்டைகளை விட நாட்டுக்கோழி முட்டைக்கு கூடுதல் மவுசு உண்டு. ஆனாலும் விலை அதிகம் என்பதாலும் உற்பத்தி குறைவு என்பதாலும் நாட்டுக்கோழி முட்டைகளின் பயன்பாடு குறைந்த அளவிலேயே உள்ளது. திருப்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பல இடங்களில் முட்டைக்கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட்டு முட்டை உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீப காலங்களாக முட்டை விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் ரூ.3.65-க்கு விற்பனையான முட்டையின் விலை தற்போது ரூ.5-ஐக் கடந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.5.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

போக்குவரத்துச்செலவு உயர்வு

இந்த விலை உயர்வு குறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

பொதுவாக கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். அந்த நேரத்தில் ராட்சத மின் விசிறிகள் அமைத்தும் ஈர சாக்குகளைத் தொங்க விட்டும் கோழிகளை வெப்பத்திலிருந்து பாதுகாப்போம். ஆனாலும் வெப்பத்தின் தாக்கத்தால் கோழிகளின் முட்டையிடும் திறன் குறையும். இதனால் முட்டை உற்பத்தி குறைந்து விலையேற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

தற்போது தீவனங்களுக்கான செலவு மற்றும் டீசல் விலை உயர்வால் அதிகரித்திருக்கும் போக்குவரத்துச் செலவு, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வு கட்டாயமாகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் நாமக்கல் மண்டலத்தில் நிர்ணயிக்கப்படும் முட்டை விலையை அடிப்படையாகக் கொண்டே மற்ற பகுதிகளில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முட்டை விலை உயர்வு குறித்து விற்பனையாளர்கள் கூறியதாவது:- கடந்த சில வாரங்களாகவே முட்டை விலை படிப்படியாக உயர்த்தப்படுகிறது. வெளிச்சந்தை நிலவரத்தை அடிப்டையாகக் கொண்டே சத்துணவுக்கான கொள்முதல் விலைக்கான டெண்டர் விடப்படும். ஒப்பந்தம் பெறும் நிறுவனம் ஆண்டு முழுவதும் அதே விலைக்குத் தான் சத்துணவுக்கான முட்டை விநியோகம் செய்ய வேண்டும். விரைவில் சத்துணவு முட்டைக்கான டெண்டர் விடப்பட உள்ள நிலையில் திட்டமிட்டு படிப்படியாக விலை உயர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story