வயதான தம்பதி அடித்துக்கொலை; நகைகள் கொள்ளை


வயதான தம்பதி அடித்துக்கொலை; நகைகள் கொள்ளை
x

கரூர் அருகே வயதான தம்பதியை அடித்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 76). இவரது மனைவி தைலி (71). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தங்கவேல்-தைலி ஆகியோர் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள ஓடையூர் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஒரு மாம்பழ தோட்டத்தை 19 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து அங்கு குடிசை அமைத்து தங்கி தோட்டத்தை பராமரித்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு தங்கவேல்-தைலி ஆகியோர் குடிசையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது குடிசைக்குள் புகுந்த மர்மநபர்கள் தைலி கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கவேலும், தைலியும் மர்மநபர்களுடன் போராடினர். ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் தங்கவேலையும், தைலியையும் அடித்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் 2 பேருக்கும் பின் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும், மர்மநபர்கள் தைலி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இந்தநிலையில் நேற்று காலை தோட்டத்தின் உரிமையாளர் சரவணன் அங்கு சென்றுள்ளார். அப்போது தங்கவேலுவும், தைலியும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வயதான தம்பதியை கொன்ற மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story