சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x

பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு சலுகைகளையும், பணப்பலன்களையும் பெறுவதை தடுக்கும் 'பி.பி.2' அறிவிப்பாணையை ரத்துசெய்ய வேண்டும், ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனத்தை நிறுத்த வேண்டும், காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும், தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் முத்தரப்பு ஒப்பந்தத்தை போடவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலையில் இருந்தே தொழிலாளர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியநிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் போலீசார் அமைத்த தடுப்புகளையும் மீறி, மின்வாரிய அலுவலகத்துக்குள் அத்துமீறி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

மின்வாரிய ஊழியர்கள், தலைமை அலுவலக வளாகத்தின் மையப்பகுதியில் அமர்ந்து தங்களது காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதில், தொ.மு.ச. நீங்கலாக சுமார் 16 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே அவ்வப்போது மின்வெட்டால் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றதால், பல்வேறு இடங்களில் மின்சாரம் தொடர்பான அவசர குறைகளை தீர்க்க முடியாமல் சில இடங்களில் பொதுமக்கள் கடுமையாக சிரமத்துக்கு உள்ளாகினார்கள். இதனால் அவர்கள் இருளில் மூழ்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்காலிக 'வாபஸ்'

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளோடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி பேச்சுவார்த்தை நடத்தினார். மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு வரையிலும் நீடித்தது.

பேச்சுவார்த்தையில் மின்வாரிய பணியாளர்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை ரத்து செய்வதற்கு 28-ந் தேதி (நாளை) நடைபெறும் மின்வாரிய கூட்டத்தில் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படுவதாக முடிவு எட்டப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கும் தீர்வு எட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு கூடி விவாதித்தது. அதனைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story