கேர்மாளம் வனச்சாலையில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து ஒற்றை யானை அட்டகாசம்


கேர்மாளம் வனச்சாலையில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து ஒற்றை யானை அட்டகாசம்
x

கேர்மாளம் வனச்சாலையில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.

ஈரோடு

தாளவாடி

கேர்மாளம் வனச்சாலையில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.

யானை அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிவதும், விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

சில நேரம் யானைகள் சாலையில் உலா வந்து வாகனங்களை துரத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது.

பஸ்சை நோக்கி சென்றது

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து கேர்மாளம் வழியாக கோவைக்கு நேற்று முன்தினம் மாலை தமிழக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மாலை 5 மணி அளவில் கேர்மாளம் வனச்சாலையில் உள்ள கெத்தேசால் என்ற இடத்தில் சென்றபோது நடுரோட்டில் பஸ்சை வழிமறித்தபடி ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது.

பின்னர் யானை ரோட்டில் அங்கும் இங்கும் நடமாடியது. இதனால் பாதுகாப்பு கருதி டிரைவர் பஸ்சை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டார். அப்போது பஸ்சை பார்த்த யானை அதை நோக்கி மெல்ல மெல்ல ஆடி அசைந்தபடி நடந்து வந்தது.

கண்ணாடியை உடைத்தது

இதன் காரணமாக யானையிடம் இருந்து தப்பிக்க டிரைவர் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். ஆனால் யானை அங்கிருந்து செல்லவில்லை. பஸ்சை நோக்கியே வந்தது. பஸ் அருகே சென்றதும் அதன் முன்பக்க கண்ணாடியை யானை துதிக்கையால் மெதுவாக தடவியது. பின்னர் துதிக்கையால் பஸ்சின் கண்ணாடி மீது ஓங்கி அடித்தது. இதில் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கி சேதமடைந்தது.

இதனால் பயணிகள் யாரும் பயத்தில் கீழே இறங்கவில்லை. சிலர் "அய்யோ, அம்மா, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கூச்சலிட்டனர். பின்னர் யானை ரோட்டில் அங்கும் இங்கும் சிறிது நேரம் உலாவியது. அதன்பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த காட்சியை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போன் மூலம் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.


Next Story