தாளவாடி அருகே தொடர்ந்து தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டம்- 30 தென்னங்கன்றுகள் நாசம்


தாளவாடி அருகே யானை கூட்டம் தொடர்ந்து தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. 30 தென்னங்கன்றுகளை மிதித்து நாசம் செய்தன.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே யானை கூட்டம் தொடர்ந்து தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. 30 தென்னங்கன்றுகளை மிதித்து நாசம் செய்தன.

யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.

இந்தநிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் தேவா (வயது 35). இவர் 3 ஏக்கர் தோட்டத்தில் தென்னை மரம் வளர்த்து வருகிறார்.

தென்னங்கன்றுகள் நாசம்

நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10-க்கும் மேற்பட்ட யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து தென்னங்கன்றுகளை மிதித்தும், ஓலைகளை தின்றும் நாசப்படுத்தின.

சத்தம் கேட்டு காவலுக்கு இருந்த விவசாயி தேவா எழுந்து வெளியே ஓடிவந்தார். அப்போது யானைகள் தோட்டத்தை நாசம் செய்வதை பார்த்து அதிர்ந்துபோய், அக்கம் பக்கத்து தோட்டத்தில் இருப்பவர்களை செல்போனில் உதவிக்கு அழைத்தார்.

அதன்பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து தீப்பந்தம் காட்டியும், அதிக ஒலி எழுப்பியும் யானைகளை விரட்ட முயன்றார்கள். ஆனாலும் சுமார் 2 மணி நேரம் அதாவது அதிகாலை 4 மணி வரை தென்னங்கன்றுகளை நாசம் செய்துவிட்டு யானைகள் தானாக காட்டுக்குள் சென்றன.

இதற்கிடையே அங்கிருந்து சென்ற யானைகள் மல்லன்குழியை சேர்ந்த இளங்கோ (43) என்பவரின் தோட்டத்தில் புகுந்து தண்ணீர்் குழாய்களை உடைத்து சேதப்படுத்தின.

கோரிக்கை

யானைகள் புகுந்ததில் சுமார் 4 ஆண்டுகள் வளர்ந்த நிலையில் இருந்த 30 தென்னங்கன்றுகள் நாசம் அடைந்தன. 2 நாட்களுக்கு முன்பு இதே தோட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் யானைகளால் நாசப்படுத்தப்பட்டன.

யானைகள் தொடர்ந்து இந்த பகுதியில் வந்து பயிர்களையும், மரங்களையும் நாசப்படுத்துகின்றன. வனத்துறையினர் யானைகள் காட்டை விட்டு வெளியேறும் இடங்களில் அகழி அமைக்கவேண்டும். சேதமான பயிர்களுக்கும் நஷ்டஈடு பெற்றுத்தரவேண்டும் என்று விவசாயி தேவா கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story