எல்பின் நிறுவன முதலீட்டாளர்கள் திடீர் போராட்டம்


எல்பின் நிறுவன முதலீட்டாளர்கள்  திடீர் போராட்டம்
x

திருச்சியில் எல்பின் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை பூட்டுப்போட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சியில் எல்பின் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை பூட்டுப்போட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எல்பின் நிதி நிறுவனம்

திருச்சி மன்னார்புரத்தில் இயங்கி வந்த எல்பின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பலருக்கு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் எல்பின் நிதி நிறுவன மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறியும், இதனால் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை இழுத்து பூட்டும் போராட்டத்தை நடத்த போவதாகவும் கூறி, எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்த அன்னை மணியம்மையார் முதலீட்டாளர்கள் நலச்சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் மன்னார்புரம் காஜாமலை காலனி அருகே நேற்று காலை திரண்டனர்.

பூட்டு போடும் போராட்டம்

நிதி நிறுவன மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். முதலீட்டாளர்களை ஏமாற்றியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு பினாமி பெயரில் உள்ள பல ஆயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை நோக்கி பூட்டு போட சங்கிலியுடன் சென்றனர்.

55 பேர் கைது

அங்கு பாதுகாப்புக்காக இருந்த கே.கே.நகர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 25 பெண்கள் உள்பட 55 பேரை கைது செய்தனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்பின் நிறுவன உரிமையாளர்கள் ராஜா, ரமேஷ்குமார் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் இருந்து உருவபொம்மையை பறித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story