ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

போட்டித்தேர்வு இன்றி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் "2013-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலைவாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச்சான்றிதழை ஆயுட்காலத் தகுதி சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும்" என 2 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. 2-வது வாக்குறுதியைப் பொறுத்தவரை, 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதியன்று ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச்சான்றிதழை ஆயுட்கால தகுதி சான்றிதழாக மத்திய அரசு மாற்றி அமைத்துவிட்டது.

19 மாதங்களாக நிறைவேற்றப்படவில்லை

அதற்கான அறிவுரைகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. அதே சமயத்தில், முதல் வாக்குறுதியான, ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலைவாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை.

தற்போதைய கோரிக்கை, மறுநியமன போட்டி தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்துவிட்டு, காலி பணியிடங்களை போட்டி தேர்வின்றி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வைத்து நிரப்ப வேண்டும் என்பது தான். இதில் கொள்கை முடிவு தான் எடுக்கப்பட வேண்டுமே தவிர, கூடுதல் நிதிச்சுமை ஏதும் அரசுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. மீண்டும் போட்டித்தேர்வு என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், போட்டித்தேர்வின்றி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story