ஈரோட்டில் பரபரப்பு; வாலிபரை சரமாரியாக பாட்டிலால் குத்திய எலக்ட்ரீசியன்

ஈரோட்டில் வாலிபரை எலக்ட்ரீசியன் ஒருவர் சரமாரியாக பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோட்டில் வாலிபரை எலக்ட்ரீசியன் ஒருவர் சரமாரியாக பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பணம் கேட்டு மிரட்டல்
ஈரோடு தென்றல்நகரை சேர்ந்தவர் பத்ரி. இவருடைய மகன் பரத்ராஜ் (வயது 21). இவர் ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான அபுபக்கர் சித்திக் என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் செய்து வைக்க பரத்ராஜின் தாய் ராஜேஸ்வரி முன்னிலையில் அபுபக்கர் சித்திக் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அபுபக்கர் சித்திக்கிடம் ரூ.5 லட்சத்தை பரத்ராஜ் கேட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் பல தவணைகளாக பரத்ராஜ் பெற்றதாக தெரிகிறது.
மேலும் பரத்ராஜின் தாய் ராஜேஸ்வரி, மகளிர் சுயஉதவிக்குழுவில் வாங்கிய ரூ.1 லட்சத்தை அபுபக்கர் சித்திக் செலுத்த சொல்லி பரத்ராஜ் மிரட்டி உள்ளார். இதனால் அபுபக்கர் சித்திக் ஆத்திரம் அடைந்தார்.
சரமாாி குத்து
இந்த நிலையில் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று பகலில் பரத்ராஜ் நின்றிருந்தார். அப்போது ஒரு ஸ்கூட்டரில் வந்த அபுபக்கர் சித்திக், பரத்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் கையில் வைத்திருந்த சோடா பாட்டிலை மோட்டார் சைக்கிளில் உடைத்து பரத்ராஜின் முகத்தில் சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த பரத்ராஜ் கீழே விழுந்தார். இருந்தாலும், ஆத்திரம் குறையாத அபுபக்கர் சித்திக் மீண்டும் பல முறை முகத்தில் பாட்டிலால் குத்தினார்.
அதன்பிறகு அங்கிருந்தவர்கள் பரத்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அபுபக்கர் சித்திக்கின் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டதால் அவரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஈரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியான வெட்டுக்காட்டுவலசில் வாலிபரை ஒருவர் சரமாரியாக பாட்டிலால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.