சுரங்கப்பாதை போக்குவரத்து திட்டத்தின் அடிப்படையில் மதுரை விமானநிலைய ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் -முதல்-அமைச்சருக்கு வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

மதுரை விமானநிலைய ஓடுதள விரிவாக்க பணிகளை சுரங்கப்பாதை போக்குவரத்து திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரை விமானநிலைய ஓடுதள விரிவாக்க பணிகளை சுரங்கப்பாதை போக்குவரத்து திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஓடுதள விரிவாக்க பணிகள்
தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் கடந்த 1960-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. 1962-ம் ஆண்டு முதல் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டு படிப்படியாக மதுரையிலிருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், போன்ற நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளுக்கும் தற்போது விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை விமான நிலையம் சுமார் 17 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பெரிய விமான நிலையமாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பயணிகள் மதுரை விமான நிலையத்தின் மூலம் பயணம் செய்கின்றனர். மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை தற்போது 7 ஆயிரத்து 500 அடி நீளத்தில் உள்ளது. இதனை 12 ஆயிரத்து 500 அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய 2009-ம் ஆண்டில் திட்டமிடப்பட்டு, சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு 2022-ம் ஆண்டில் சுமார் 615.92 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு விமான போக்குவரத்து ஆணையகத்துக்கு இலவசமாக ஒப்படைக்கப்பட்டது. புவியியல் அமைப்புபடி, மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டால் மதுரை சுற்றுச்சாலை துண்டிக்கப்படும் நிலை உள்ளது.
தன்னிச்சை முடிவு
இதனால், சென்னையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு தேசிய நெடுஞ்சாலை 45-பி வழித்தடத்தில் செல்லும் வாகனங்களுக்கும், பிற தென் மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும், என்.எச். 7 வழியாக செல்லும் வாகன போக்குவரத்து தடைபடும். இதற்கான மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்றால் 8 கி.மீட்டருக்கு மேல் கூடுதலாக பயணிக்க வேண்டியுள்ளது. கலெக்டர் தலைமையில் சுற்றுச்சாலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மதுரை விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அண்டர் பாஸ் என்று சொல்லப்படும் சுரங்கப்பாதை முறையில் கீழே வாகனங்கள் செல்லவும், மேலே விமான ஓடுதளம் அமையும் படியும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுகள் இந்திய விமான போக்குவரத்து ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.
அதன்படி, மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் சுரங்கப்பாதை என்ற முறையில் சுமார் 2 கி.மீ. தூரம் அமைக்க ரூ.800 கோடி வரை செலவாகும் என்றும், அதற்கு பதிலாக ரிங் ரோட்டில் 8 கிலோ மீட்டர் தூர மாற்றுப்பாதை அமைத்து விரிவாக்கம் செய்யலாம் என மாநில நெடுஞ்சாலைத்துறை வலியுறுத்துவதாக தெரிய வருகிறது. மாற்றுப்பாதை அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கான எவ்வித அடிப்படை பணிகளும் மாநில அரசால் தொடங்கப்படாமல், அதிகாரிகள் தன்னிச்சையாக எடுக்கும் இந்த முடிவால் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர பல வருடங்கள் ஆகும். இந்த காலதாமதம் திட்ட மதிப்பீட்டை கணிசமாக உயர்த்தும் அபாயம் உள்ளது.
முதல்-அமைச்சர் தலையிட
எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப்பணிகள் சுரங்கப்பாதை போக்குவரத்து அடிப்படையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அளவில் நடக்க உள்ள இந்த திட்டத்துக்கான செலவை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு வருடத்துக்குள் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.