கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் ஒரு என்ஜினுடன் இயக்கம்

கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் ஒரு என்ஜினுடன் இயக்கப்பட்டது.
கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் ஒரு என்ஜினுடன் இயக்கப்பட்டது.
செம்மொழி எக்ஸ்பிரஸ்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக கோவைக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. ஒரு என்ஜினுடன் இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில் நாள்தோறும் கோவையில் இருந்து காலையில் நீடாமங்கலம் வந்து என்ஜின் திசை மாற்றி மன்னார்குடிக்கும், அதேபோல் மறுமார்க்கமாக மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வந்து என்ஜின் திசை மாற்றி இரவு நேரத்தில் கோவைக்கும் புறப்பட்டு செல்லும்.
இந்த என்ஜின் திசைமாற்றும் பணி முடிந்து ரெயில் புறப்பட 45 நிமிடங்கள் வரை ஆகும். இதன் காரணமாக ரெயில்வே கேட் மூடப்படும் என்பதால் நீடாமங்கலத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து நாள்தோறும் ஸ்தம்பிக்கிறது.
இரட்டை என்ஜின்
இதனால் ஏற்படும் பிச்சினைகளுக்கு தீர்வு காண கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலை இரட்டை என்ஜினுடன் இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று முன்தினம் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமாக மன்னார்குடி வந்து சென்றது.
மீண்டும் ஒரு என்ஜின்
ஆனால் கோவையில் இருந்து நேற்று காலை 6.27 மணிக்கு நீடாமங்கலம் வந்த அந்த ரெயிலில் ஒரு என்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டு இருந்தது. அந்த ரெயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நீடாமங்கலம் வந்தனர்.
பின்னர் என்ஜின் திசைமாற்றப்பட்டு ரெயில் மன்னார்குடி புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் விரைவில் நிரந்தரமாக இரட்டை என்ஜினுடன் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.