முகநூல் பழக்கத்தால் விபரீதம்:தொழிலாளியை கத்தியால் குத்தி ஏ.டி.எம். மூலம் ரூ.80 ஆயிரம் பறிப்புசிறுவன் உள்பட 4 பேர் கைது


முகநூல் பழக்கத்தால் விபரீதம்:தொழிலாளியை கத்தியால் குத்தி ஏ.டி.எம். மூலம் ரூ.80 ஆயிரம் பறிப்புசிறுவன் உள்பட 4 பேர் கைது
x

முகநூல் பழக்கத்தால் நம்பி சென்ற வடலூர் தொழிலாளியை கத்தியால் குத்தி ஏ.டி.எம். மூலம் ரூ.80 ஆயிரம் பறித்து சென்ற 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

குள்ளஞ்சாவடி,

கத்திக்குத்து

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ஜோதிமணி (வயது 37). சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறார். இவருடன் முகநூல் மூலம் பழக்கமான திருப்பூரை சேர்ந்த சுரேஷ்ராகுல் என்பவர் குள்ளஞ்சாவடிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பிய ஜோதிமணியும் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு குள்ளஞ்சாவடிக்கு சென்றுள்ளார்.

அங்கு சுரேஷ்ராகுல் மற்றும் அவருடன் வந்த 3 பேர் புத்தாண்டு கொண்டாட பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் 4 பேரும் ஜோதிமணியை கத்தியால் குத்தி, அவரிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பறித்து, ரகசிய குறியீட்டு எண்ணையும் பெற்றுக்கொண்டனர்.

ரூ.80 ஆயிரத்தை எடுத்தனர்

பின்னர் அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ஜோதிமணி கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதில் காயமடைந்த ஜோதிமணி அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி ஜோதிமணி கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையில் மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் குள்ளஞ்சாவடி ரெயில்வே கேட் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

4 பேர் கைது

அப்போது, அவ்வழியாக வந்த திருப்பூரை சேர்ந்த பேச்சிமுத்து மகன் மனோஜ் (வயது 18), அஸ்லாம் மகன் இக்பால்கான் (19), ஜெகநாதன் மகன் சுரேஷ்ராகுல் (19), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஜோதிமணியை கத்தியால் குத்தி ஏ.டி.எம். கார்டை பறித்து, அதன் மூலம் ரூ.80 ஆயிரத்தை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து ரூ.80 ஆயிரத்தில் ரூ.40 ஆயிரத்தை செலவு செய்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தையும், ஏ.டி.எம். கார்டு, பேனா கத்தி, செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இவர்களில் 17 வயது சிறுவன் மட்டும் கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மற்ற 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story