மது பழக்கத்தினால் குடும்ப பிரச்சினை: சேலையில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை


மது பழக்கத்தினால் குடும்ப பிரச்சினை: சேலையில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
x

மது பழக்கத்தினால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மனைவி கோபித்துக்கொண்டு சென்றார். வீட்டுக்கு வர அவர் மறுப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

எடப்பாடி:

கணவன்- மனைவி தகராறு

எடப்பாடி நைனாம்பட்டி, பழையபேட்டையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 34), லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா. இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீகிருஷ்ணன் (12), ஹரிகிருஷ்ணன் (9) ஆகிய 2 மகன்களும், தியாஸ்ரீ (4) என்ற மகளும் உள்ளனர்.

கோபாலகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கவிதா, தன்னுடைய 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

வீட்டுக்கு வர மறுப்பு

அதன்பிறகு கோபாலகிருஷ்ணன், கவிதாவை தொடர்பு கொண்டு தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைப்பு விடுத்தார். அதற்கு கவிதா மறுப்பு தெரிவித்ததாக ெதரிகிறது. நேற்று முன்தினம் கவிதாவை தொடர்பு கொண்ட கோபாலகிருஷ்ணன், நீ வராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். கோபாலகிருஷ்ணன் மதுபோதையில் ஏதோ சொல்கிறார் என கவிதா நினைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

காலையில் கோபாலகிருஷ்ணன் வேலைக்கு வரவில்லை என அவருடைய முதலாளி கவிதாவை தொடர்பு கொண்டு கேட்டதாக தெரிகிறது. கவிதா, கணவரை தொடர்பு கொண்ட போது செல்போன் நீண்டநேரம் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது.

தூக்குப்போட்டு சாவு

அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து கோபாலகிருஷ்ணனை பார்க்க வீட்டுக்கு சென்றனர்.

அங்கு வீட்டின் உள்ளே சேலையில் தூக்குப்போட்டு கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story