வாயில் வாழைப்பழத்துடன் 3-வது நாளாக விவசாயிகள் போராட்டம்


வாயில் வாழைப்பழத்துடன் 3-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x

வாயில் வாழைப்பழத்துடன் 3-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

மலைக்கோட்டை:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்காமல் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை நசுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும், காவிரியில், தமிழகத்திற்கான தண்ணீர் பெற்றுத்தர முனைப்பு காட்டாத தமிழக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விட கர்நாடக மாநிலத்திற்கு அழுத்தம் தராத மத்திய அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்காமல், சாகுபடி செய்ய தேவையான காவிரி தண்ணீரை பெற்று தராமல் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும், இது தொடர்பாக பேசக்கூடாது என மிரட்டுவதை கண்டித்தும் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன், வாயில் வாழைப்பழத்துடன் நூதன போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், ஜனநாயக நாடு என்று கூறுகிறார்கள். ஆனால் டெல்லிக்கு சென்று போராட அனுமதி மறுக்கின்றனர், விவசாயிகள் வாழ்வதா? சாவதா? என்று தெரியவில்லை. விவசாயிகளைக் கொன்று விடாமல், காப்பாற்றுங்கள் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


Next Story