8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் சேலம் அருகே பூலாவரியில் நடந்தது

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக மாடுகளுடன் விவசாயிகள் சேலம் அருகே பூலாவரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொண்டலாம்பட்டி,
8 வழிச்சாலை திட்டம்
சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே பூலாவரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் புஞ்சை காடு, பூலாவாரி, ஆத்துக்காடு, அக்ரஹாரம், பூலாவரி, உத்தமசோழபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் கூறுகையில், தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்று அமைச்சர் கூறுகிறார். 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படாது என்று தமிழக அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் நின்று 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.