விதை உற்பத்தி செய்ய தயக்கம் காட்டும் விவசாயிகள்

உற்பத்தி மானிய ஊக்கத்தொகை வழங்காததால் விதை உற்பத்தி செய்ய விவசாயிகள், தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டமாகும். இங்கு நெல், உளுந்து அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு தேவையான நெல், உளுந்து, எள், மணிலா, கம்பு, கேழ்வரகு, தினை, பாசிப்பயிறு உள்ளிட்ட பல்வேறு விதைகளை 1,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசால் உற்பத்தி மானிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. அதாவது கடந்த காலங்களில் நெல் விதைக்கு கிலோ ரூ.10-ம், உளுந்து, எள் உள்ளிட்ட தானிய பயிர்களுக்கான விதைகளுக்கு கிலோ ரூ.25-ம் என்ற அடிப்படையில் உற்பத்தி மானிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய வகையிலும், அவர்களை மென்மேலும் விதை உற்பத்தி செய்ய ஊக்குவிப்பதாகவும் அமைந்தது.
விவசாயிகள் தயக்கம்
இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக விதை உற்பத்தி செய்ததற்கான உற்பத்தி மானிய ஊக்கத்தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளிடம் பலமுறை விவசாயிகள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக விதை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதே நிலைமை நீடித்தால் வரும்காலங்களில் விவசாயத்திற்கு தேவையான விதைகள் கிடைப்பதற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
கலெக்ரிடம் மனு
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன், செயலாளர் முருகையன் உள்ளிட்ட விவசாயிகள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், விழுப்புரம் மாவட்டத்தில் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான விலையை அரசு இன்றுவரை அறிவிக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் பலரும், விதை உற்பத்தி செய்ய தயக்கம் காட்டுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு உடனுக்குடன் ஊக்கத்தொகை கிடைக்கவும், விதை உற்பத்தியை ஊக்குவிக்க 2023-24-ம் ஆண்டுக்கான விலையை அறிவிக்கக்கோரியும், உற்பத்திக்கான ஊக்கத்தொகையை விவசாயிகளுக்கு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.