விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர்க்கடன் வழங்கப்படும்


விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர்க்கடன் வழங்கப்படும்
x

விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர்க்கடன் வழங்கப்படும் என கல்லணையை திறந்த பிறகு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

தஞ்சாவூர்

விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர்க்கடன் வழங்கப்படும் என கல்லணையை திறந்த பிறகு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

பேட்டி

டெல்டா பாசனத்துக்கு தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட பிறகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த தண்ணீர் கல்லணைக்கு வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையில் இருந்து இன்று (அதாவது நேற்று) காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகியவற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து கிளை ஆறுகளிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. கல்லணையில் இருந்து வினாடிக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் தலா 500 கனஅடியும், கல்லணைக்கால்வாயில் 100 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மாறுபாடுகள்

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.93 அடியாகவும், நீர் இருப்பு 66.051 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருக்கும் தண்ணீரை கொண்டு பாசனத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டிய நிலை உள்ளதால் நீர் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்யப்படும்.

பருவமழைக்கு ஏற்ப நீர்ப்பங்கீடு மாற்றி அமைக்கப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர்வளத்துறை அலுவலர்களுடன் நீர்ப்பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 4 கிலோமீட்டர் தூரத்தை தவிர 99.96 சதவீதம் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 7 முதல் 10 நாட்கள் ஆகும்.

குறுவை தொகுப்பு திட்டம்

இந்த பாசனத்தின் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 3 லட்சத்து 42 ஆயிரத்து 696 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.

அதை விட இந்த ஆண்டு கூடுதலாக எதிர்பார்க்கிறோம். இதற்காக குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் விவசாயிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். இதனால் கூடுதல் விளைச்சல் கிடைக்கும் என்று நம்புகிறோம். இயற்கை இந்த ஆண்டு கை கொடுக்கும் என்று நம்புகிறோம்.

பயிர்க்கடன்

கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவைப்படும் அளவுக்கு கடன் வழங்க தயாராக இருக்கிறோம். நபார்டு வங்கியில் கடன் பெற்று தான் வழங்க இருக்கிறோம். விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர்க்கடன் வழங்கப்படும். 5 லட்சம் டன்னுக்கு மேல் உரம் இருப்பில் உள்ளது என வேளாண்மைத்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து, எதிர்நோக்கு மழை, கர்நாடகாவில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கு ஏற்ப தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story