திருமணமாகாத வேதனையில் வங்கி பெண் ஊழியர் தற்கொலை

திருமணம் ஆகாத வேதனையில் தர்மபுரியை சேர்ந்த வங்கி பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் ஆகாத வேதனையில் தர்மபுரியை சேர்ந்த வங்கி பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வங்கி பெண் ஊழியர்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் அனிதா (வயது 32). இவர், சேலம் அம்மாபேட்டையில் உள்ள பொதுத்துறை வங்கியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர், சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று அவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதுபற்றி அந்த ஊழியரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரியில் சாவு
பின்னர் அனிதாவை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அனிதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
திருமணமாகாத வேதனை
விசாரணையை தொடர்ந்து போலீசார் கூறுகையில், அனிதாவுக்கு 32 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன வேதனையில் அனிதா இருந்து வந்துள்ளார். அதனாலேயே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.
இருந்தாலும் அனிதா தற்கொலைக்கு வேறு காரணம் எதுவும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அனிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தர்மபுரியில் இருந்து சேலத்துக்கு மாறுதலாகி வந்தது குறிப்பிடத்தக்கத்து.
இந்த சம்பவம் வங்கி ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.