பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது


பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
x

தஞ்சையில், பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில், பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம்

தஞ்சை ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன். தொழில் அதிபரான இவர், கல்லூரி, ஆஸ்பத்திரி மற்றும் இரு சக்கர வாகன விற்பனையகம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக தஞ்சையை அடுத்த குருவாடிப்பட்டியில் 4½ ஏக்கர் நிலம் உள்ளது.

3 சர்வே எண்கள் கொண்ட இந்த நிலத்தில் தனது பெயருடன் உள்ள மற்றொரு பெயரை நீக்கிவிட்டு தனது பெயரில் மட்டும் பட்டாவை மாற்றம் செய்ய வேண்டும் என இளங்கோவன் கடந்த 3-ந் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தார்.

ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார்

இந்த விண்ணப்பம் தொடர்பாக குருவாடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வீரலட்சுமி(வயது 31) என்பவர் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இளங்கோவனுக்கு சொந்தமான நிறுவனத்தின் மேலாளர் அந்தோணி யாகப்பா என்பவர் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்து பட்டா மாறுதல் தொடர்பாக பேசினார்.

அப்போது 3 பட்டாவையும் பெயர் மாற்றம் செய்வதற்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அந்தோணி யாகப்பாவிடம் கிராம நிர்வாக அலுவலர் கூறி உள்ளார்.

முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இவர், தனது நிறுவன உரிமையாளரிடம் கூறிவிட்டு, தங்களை மீண்டும் தொடர்பு கொள்வதாக அந்தோணி யாகப்பா தெரிவித்து விட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வல்லம் வடக்கு கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அந்தோணி யாகப்பாவை கிராம நிர்வாக அலுவலர் வீரலட்சுமி வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு சென்ற அந்தோணி யாகப்பாவிடம் 3 பட்டாவையும் பெயர் மாற்றம் செய்ய ரூ.30 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.5 ஆயிரம் குறைத்து கொண்டு ரூ.25 ஆயிரம் லஞ்சம் தருமாறு கிராம நிர்வாக அதிகாரி வீரலட்சுமி கேட்டுள்ளார். அதற்கு அந்தோணி யாகப்பா மொத்தமாக ரூ.25 ஆயிரம் கொடுக்க முடியாது என்றும், முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

போலீசார் யோசனை

இதனையடுத்து அந்தோணி யாகப்பா தனது நிறுவன உரிமையாளரின் சம்மதத்தின் பேரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் நேற்று காலை புகார் அளித்தார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை அந்தோணி யாகப்பாவிடம் கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு கூறினர்.

அதன்படி கிராம நிர்வாக அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்ட அந்தோணி யாகப்பா ரூ.10 ஆயிரத்தை எங்கே கொண்டு வந்து கொடுப்பது? என கேட்டுள்ளார்.

கைது

அதை கேட்ட கிராம நிர்வாக அலுவலர், தஞ்சை தாசில்தார் அலுவலகத்திற்கு வருமாறு கூறினார். அதன்படி நேற்று மாலை ரூ.10 ஆயிரத்துடன் வந்த அந்தோணி யாகப்பா மீண்டும் கிராம நிர்வாக அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, இ-சேவை மையத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

அங்கு இருந்த கிராம நிர்வாக அலுவலர் வீரலட்சுமியிடம் போலீசார் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் அந்தோணி யாகப்பா கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கிய அவர், தனது பையில் வைத்தபோது அங்கே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருண்பிரசாத் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வீரலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் வீரலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.


Next Story