குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கம்
புயல் எச்சரிக்கையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி போயினர். இந்த நிலையில், கடலூர் நகரில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.
மாண்டஸ் புயலால் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக இரவு குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்களே இயங்கும் என்றும் அரசு அறிவித்தது. இருப்பினும் கடலூரில் நேற்று காலை முதல் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி போனார்கள் இதனால், நகரில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. எனவே குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது. அதாவது, பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பஸ்கள் ஓடின. அதேபோல் தனியார் பஸ்களிலும் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. வழக்கமாக கடலூர் பஸ் நிலையத்தில் அதிக எண்ணிக்கையில் தனியார் பஸ்கள் நிற்கும்.
தனியார் பஸ்கள்
நேற்று மிக குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே நின்று பயணிகளை ஏற்றிச்சென்றது. குறிப்பாக கடலூரில் இருந்து பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் பகுதிகளுக்கு ஓரளவு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பஸ் நிலையத்தில் கூட்டமும் குறைவாக இருந்தது. அலுவலகங்களுக்கு செல்வோர் மட்டும் பஸ்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் சென்று வந்தததை பார்க்க முடிந்தது.