கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பண்டல், பண்டலாக பறிமுதல்

வலங்கைமானில் 2-வது நாளாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பண்டல், பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 போ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வலங்கைமான்:
வலங்கைமானில் 2-வது நாளாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பண்டல், பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 போ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பட்டாசு தொழில்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் தீபாவளி பட்டாசு உற்பத்தி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை தொழிலாக தொடங்கப்பட்டது. தற்போது வலங்கைமான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மேல்கீழத்தெரு, பாய்க்காரதெரு, சுப்பன் நாயக்கன்தெரு, செட்டித்தெரு, வடக்கு அக்ரஹாரம், நடுஅக்ரஹாரம், கீழ அக்ரஹாரம், உப்புக்கார தெரு மற்றும் மகா மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவு பட்டாசுகளை தயாரித்து இருப்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
அதிரடி சோதனை
இதில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக வெடி மருந்து வகைகளை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை வலங்கைமான் பகுதி நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்குமார், காமராஜ், மற்றும் போலீசார் வலங்கைமான் வந்து பட்டாசு உற்பத்தி செய்யும் பகுதிகள், நிரந்தர பட்டாசு கடைகள் மற்றும் அவர்களின் வீடுகள், குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
9-க்கும் மேற்பட்ட கடைகளில்...
இந்த சோதனையின்போது கடை மற்றும் குடோன்களில் அதிக அளவு பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து அனைத்து கடை வாசல் முன்பும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டனர்.மேலும் அனைத்து கடை உரிமையாளர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் 9-க்கும் மேற்பட்ட கடைகளில் தீவிர சோதனை நடத்தி அங்கிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசு பண்டல்களை லாரிகளில் ஏற்றி அரசு ஒழுங்கு முறை விற்பனைக்கூட குடோனில் பாதுகாப்பாக எடுத்து சென்று வைத்தனர்.
2-வது நாளாக...
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வலங்கைமான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்கள், கடைகள், மற்றும் குடோன்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கடைகள், குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்து லாரிகளின் மூலம் குடோனுக்கு எடுத்துச்சென்றனர். இதனால் வலங்கைமான் பகுதி முழுவதும் நேற்று 2-வது நாளாக பரபரப்புடன் காணப்பட்டது.
7 பேர் கைது
மேலும் பட்டாசு கடை உரிமையாளர்கள் 5 பேரை வலங்கைமான் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வலங்கைமான் பகுதியில் அளவுக்கு அதிகமாக தீபாவளி பட்டாசுகளை இருப்பு வைத்த கடை உரிமையாளர்கள் சுந்தர்(வயது 53), ராஜா(52), ரவிச்சந்திரன்(56), சீனிவாசன்(56), ரவிச்சந்திரன்(48), அருணகிரிநாதன்(50), பாலகுரு(38) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.