தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீனவர்கள் போராட்டம்

நவீன எந்திரம் மூலம் கடலில் மணல் அள்ளக்கோரி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தடையை மீறி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
புதுக்கடை:
நவீன எந்திரம் மூலம் கடலில் மணல் அள்ளக்கோரி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தடையை மீறி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
தேங்காப்பட்டணம் துறைமுகம்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் பூத்துறை பகுதியை சேர்ந்த சைமன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளத்தில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய போது முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து பலியானார்.
முகத்துவாரத்தில் மணல் திட்டை அகற்றாததால் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் மணல் திட்டை அகற்றி முகத்துவாரத்தை சீரமைக்கக்கோரி மீனவர்கள் தூத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.
இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் தற்காலிக மணல் அள்ளும் எந்திரத்தை அங்கு கொண்டு வந்தது.
மீனவர்கள் போராட்டம்
ஆனால் மணல் அள்ளும் நவீன எந்திரம் மூலம் தான் மணலை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மீனவர்கள் தரப்பு தெரிவித்தது. மேலும் நேற்று காலை முதல் துறைமுக பகுதியில் மணல் அள்ளும் வரை மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஒருதரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் நேற்று காலையில் கோரிக்கையை வலியுறுத்தி போலீசாரின் தடையை மீறி மீனவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மீனவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தனர்.
இந்த போராட்டத்திற்கு தூத்தூர் மண்டல மீன் விற்பனையாளர் சங்க தலைவர் சுபி தலைமை தாங்கினார். தெற்காசிய மீனவர் கூட்டமைப்பு செயலாளர் சர்ச்சில், மீனவர் ஒருங்கிணைப்பு செயலாளர் ஆன்றோ லெனின், தேங்காப் பட்டணம் மீன்பிடி துறைமுக வர்த்தக சங்க செயலாளர் சந்திரன், கோட்டையில் குமரி மீனவர் சங்க தலைவர் கேப்டன் ராஜன் ஆகியோர் போராட்டம் குறித்து பேசினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் நேற்று மாலையிலும் நீடித்தது. கோரிக்கை நிறைவேறும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.