நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
கடலுக்கு செல்லவில்லை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
மீன்பிடி தொழிலை நம்பி ஐஸ் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், வேன் டிரைவர்கள் என ஏராளமானோர் தொழில் புரிந்து வருகிறார்கள். வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
படகுகள் நிறுத்தி வைப்பு
அதன்படி வேதாரண்யம் பகுதி மீனவர்கள் நேற்று 5-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல், மீன்பிடி வலைகளை பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று நாகையில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தொழிலை நம்பி உள்ள ஐஸ்கட்டி உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேலை இழப்பு
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லத்தால் சில்லறை மீன் வியாபரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல மொத்த வியாபாரிகள், ஐஸ் உற்பத்தியாளர்கள், வேன் டிரைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். ஒரு சில மீனவர்கள் கடற்கரையில் வலைவிரித்து உணவுக்காக மட்டும் மீன்பிடித்து வருகின்றனர். மீண்டும் பழையபடி மீன்பிடி தொழில் நடைபெற இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
நாகை
வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தை தொடர்ந்து நாகையில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கு முன்பே கடல் சீற்றம் காரணமாக 4 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள், நேற்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடல் மீன்கள் விற்பனை இல்லாததால், இதர நீர்நிலைகளில் பிடிக்கப்பட்ட நாட்டு மீன்கள் மட்டுமே சொற்பமான அளவில் விற்பனையானது. நாகை மாவட்டத்தில் மீனவர்கள் தங்களுடைய 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான பைபர் படகுகளையும் துறைமுக பகுதியில் உள்ள கடுவையாற்றிலும், அந்தந்த கிராம கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.