அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்

தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் வழங்கப்படும் என்று மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் வழங்கப்படும் என்று மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
மருத்துவ முகாம்
தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 100 கால்நடை மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன் ஒருபகுதியாக இந்த முகாம் நடத்தப்படுகிறது. விவசாயத்துக்கும், கிராம மக்களின் வாழ்க்கைக்கும் கால்நடைகள் உறுதுணையாக இருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு 7,120 கால்நடை மருத்துவ முகாம்களை நடத்த நிதி ஒதுக்கீடு செய்து முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது 100 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த பகுதியில் கால்நடை கிளை மருத்துவ நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நடமாடும் மருத்துவ வாகனம்
விரைவில் ஒவ்வொரு சட்டப்மன்ற தொகுதியிலும் ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம் மருத்துவர்கள் கிராமங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 1,141 கால்நடை மருத்துவர்களை ஒரே நேரத்தில் முதல்-அமைச்சர் பணி நியமனம் செய்து உள்ளார். நாட்டுக்கோழி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பண்ணையில் நாட்டுக்கோழி குஞ்சு பொறிப்பகம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஏற்படுத்தி தந்துள்ளார். தெருவில் ஆதரவற்ற நிலையில் விடப்படுகின்ற நாய்கள், கால்நடைகளை பராமரிப்பவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்குவதற்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார். ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் துப்பறியும் பணிகளுக்கு ராஜபாளையம் உள்ளிட்ட நாட்டின நாய்களை பழக்கப்படுத்தி வருகிறார்கள். விவசாயிகளையும், கிராம மக்களையும் பொருளாதாரத்தில் வளர்க்கக்கூடிய ஒரு துறை என்றால் அது கால்நடை பராமரிப்புத்துறை தான் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.