ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலி


ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:15:30+05:30)

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலியானார். ரூ.3½ லட்சத்தை இழந்ததால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலியானார். ரூ.3½ லட்சத்தை இழந்ததால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் ஒருவர் பலி

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பி.ஏ.பட்டதாரியான சிவன்ராஜ். இவர் ஆன்லைனில் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் வரை இழந்ததால் நேற்று முன்தினம் ஊரில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகம் மறைவதற்குள் மேலும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலியான சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

என்ஜினீயர்

தூத்துக்குடி தட்டப்பாறை ராமநாதபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவருடைய மகன் பாலன் (வயது 30). என்ஜினீயரான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாா்.

கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். மேலும் அவருக்கு ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று பாலன் வீட்டில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தட்டப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் பாலனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் பாலன் தனது நண்பர் ஒருவருக்கு அதிகாலை 5.30 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். ஆனால், அந்த குறுஞ்செய்தி செல்லாத நிலையில் இருந்து உள்ளது. அதனை போலீசார் பார்த்தனர். அதில், எனது தந்தையின் வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று விட்டேன். என் முடிவை நானே தேடிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ரூ.3½ லட்சம்

இதையடுத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாலனிடம் நேற்று முன்தினம் அவரது தந்தை ரூ.50 ஆயிரம் கொடுத்து தனது வங்கி கணக்கில் செலுத்த கூறி உள்ளார். ஆனால் பாலன், அந்த பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி உள்ளார். இவ்வாறு கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.3½ லட்சம் வரை இழந்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்த பாலன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story