சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் உள்ள குட்டையை மீண்டும் இணைக்க கோரி சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் உள்ள குட்டையை மீண்டும் இணைக்க கோரி சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசுக்கு சொந்தமான குட்டை

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் சொக்கனூர் கிராமம், புல எண். 296/2, காட்டுப்பாளையம், எருக்கல்மேடு என்னும் இடத்தில் உள்ள குட்டை அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் இணைக்கப்பட்டு பட்டியலில் வந்துள்ளது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த குட்டையில் ஓ.எம்.எஸ்.என்ற கருவி பொருத்துவதற்காக வந்த ஒப்பந்ததாரர்கள் பொருத்திவிட்டு, அருகில் உள்ள தனியார் நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொருத்திய கருவியை திரும்ப எடுத்துச்சென்று விட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்.டி.ஓ.விடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மனு கொடுத்து முறையிட்டதன் விளைவாக அவினாசி தாசில்தார் நடவடிக்கை எடுத்து அளவீடு செய்து குட்டை அரசு புறம்போக்குக்கு சொந்தமானது உறுதி செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

அதன் பின்பும் எடுத்துச்சென்ற கருவிகளை கொண்டு வந்து குட்டையில் பொருத்தி அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் இணைப்பு ஏற்படுத்தாத திட்ட அதிகாரிகளை கண்டித்தும், திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி சொக்கனூர்,காட்டுப்பாளையம், எருக்கல்மேடு குட்டைக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் மீண்டும் இணைப்பு வழங்க வேண்டியும், எடுத்துச் சென்ற கருவிகளை கொண்டு வந்து பொருத்த வேண்டியும், தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு சார்பில் நேற்று சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் உள்ள குட்டையை மீண்டும் இணைக்க கோரி சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அப்புசாமி தலைமை தாங்கினாா். விவசாயி நடராஜ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்ட துணைசெயலாளர் எஸ்.வெங்கடாசலம், கிராமிய மக்கள் இயக்க தலைவர் தொரவலூர் சம்பத், அத்திக்கடவு இயக்க சுப்பிரமணி ஆகியோர் பேசினார்கள்.

இப்போராட்டத்தில் பட்டம்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், வள்ளிபுரம் ஊராட்சி தலைவர் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றிய தலைவர் கே.ரங்கசாமி, ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க வடக்கு ஒன்றிய தலைவர் ஆர்.சீனிவாசன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story