கப்பல் நிறுவனம் பெயரில் அதிக வட்டி தருவதாகக்கூறி மோசடி


கப்பல் நிறுவனம் பெயரில் அதிக வட்டி தருவதாகக்கூறி மோசடி
x

ஆம்பூர் பகுதியில் கப்பல் நிறுவனம் சார்பில் அதிக வட்டி தருவதாகக்கூறி பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

அதிக வட்டி

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தோல், ஷூ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆம்பூர், வாணியம்பாடி திருப்பத்தூர், பேரணாம்பட்டு குடியாத்தம், ஒடுகத்தூர் ஆலங்காயம், ஜோலார்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஆம்பூர் பகுதியில் சில நாட்களாக ஒரு கப்பல் நிறுவனம் பெயரில் செல்போன் செயலி மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என தகவல் பரவியது. அதன்பேரில் சிலர் தங்களது செல்போனில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர். அத்லே பல கவர்ச்சிகரமான பண முதலீடு திட்டங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் முதலீடு

இந்த திட்டங்களை உண்மை எனக்கருதி ஆம்பூர் பகுதியை சேர்ந்த பலர் ஆயிரக்கணக்கான ரூபாயை இந்த செயலி மூலம் முதலீடு செய்துள்ளனர். இதில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு நாளைக்கான தொகை அந்த செயலியில் வரவு வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து அந்த செயலியின் மீதான நம்பிக்கை அதிகரித்து, ஆம்பூர் கம்பெனிகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பணத்தை இந்த செயலி மூலம் முதலீடு செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக செயலி வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.

போலீசில் புகார்

எனவே தாங்கள் பணம் முதலீடு செய்தது போலி செயலியாக இருக்குமோ? என சந்தேகம் அடைந்துள்ளனர். ஒரு சிலர் பல ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.


Next Story