வானூர் அருகேஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடிபாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


வானூர் அருகேஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடிபாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா தைலாபுரம் பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள், நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் நாங்கள் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தோம். ஒவ்வொருவரும் 38 மாதங்கள் வரை தவறாமல் பணம் செலுத்தினோம். ஆனால் சீட்டு தவணைக்காலம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் எங்களுக்கு சேர வேண்டிய உரிய பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். நாங்கள் அவரிடம் பலமுறை சென்று சீட்டு பணம் தரும்படி வலியுறுத்தி வந்தோம்.

ரூ.1½ கோடி மோசடி

இந்த சூழலில் அவர் கடந்த 19-ந் தேதியன்று திருப்பதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், தற்போது வரை சொந்த ஊருக்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது. சுமார் 100 பேரிடம் அவர் சீட்டுப்பணம் வசூலித்து ரூ.1 கோடியே 57 லட்சம் வரை எங்களை ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.மேலும் அவர், வெளியில் சிலரிடமும் ரூ.1½ கோடி வரை கடன் பெற்று அந்தத் தொகையையும் உரியவர்களுக்கு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். எனவே தலைமறைவாக இருக்கும் அவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story