சேலத்தில் சொகுசு காரில் போதை ஊசி செலுத்திய கும்பல்: 7 வாலிபர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 'கவுன்சிலிங்'

சேலத்தில் சொகுசு காரில் போதை ஊசி செலுத்தி கொண்ட கும்பலை சேர்ந்த 7 வாலிபர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
போதை ஊசி
சேலம் டவுன் ஆற்றோர மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் நீண்ட நேரமாக ஒரு சொகுசு கார் நின்றது. அநத காரில் வாலிபர்கள் சிலர் இருந்தனர். இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள், சேலம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காரில் இருந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 7 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கிச்சிப்பாளையம், கோரிமேடு, சின்னதிருப்பதி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், குளுக்கோசில் வலி நிவாரணி மாத்திரையை கலந்து ஊசி மூலம் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து குளூக்கோஸ் பாட்டில்கள் மற்றும் சிரெஞ்ச் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
கவுன்சிலிங்
இதையடுத்து அவர்களை போலீசார் எச்சரித்தனர். மேலும் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர 7 பேருக்கும் சேலம் அரசு ஆஸ்பத்தியில் உள்ள மனநல நிபுணர் மூலம் ஒரு வாரம் கவுன்சிலிங் கொடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக நேற்று மாலை அவர்களை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மனநல பிரிவில் அனுமதிக்கப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. தினமும் காலை 9 மணி முதல் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்றும், கவுன்சிலிங்கிற்கு வராமல் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.