ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்:கனிமொழி எம்.பி. விவசாயிகளிடம் வழங்கினார்

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழை கனிமொழி எம்.பி. விவசாயிகளிடம் வழங்கினார்.
ஆத்தூர் வெற்றிலைக்கான புவிசார் குறியீடு சான்றிதழை விவசாயிகளிடம் கனிமொழி எம்.பி வழங்கினார்.
புவிசார் குறியீடு
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் பயிரிடப்படும் வெற்றிலைக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் ஆர்.கே.சுரேஷ் ராமலிங்கம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, ஆத்தூர் வெற்றிலைக்கான புவிசார் குறியீடு சான்றிதழை ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாய சங்கத்தினரிடம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு நல்ல விஷயத்தை யாராவது செய்தால், அதனை நாமும் செய்ய வேண்டும் என்று பலர் நினைப்பார்கள். அது தவறு இல்லை. ஆனால் முதன் முதலாக உருவாக்கி இந்த உலகுக்கு தந்து கொண்டு இருக்க கூடியவர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போய்விடுகிறது. அந்த அங்கீகாரத்தை இந்த புவிசார் குறியீடு உறுதி செய்கிறது.. விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதலை உறுதிப்படுத்த கிடைத்திருப்பது தான் ஆத்தூர் வெற்றிலைக்கான புவிசார் குறியீடு. வெற்றிலை என்பது நமது மரபிலே, நமது பண்பாட்டிலே, நமது வீட்டிலே தினமும் புழங்கக்கூடிய ஒன்று. வீட்டில் விசேஷ நாட்களில் அதிகமாக பயன்படுத்தக்கூடியது வெற்றிலை. இப்படி நம் வாழ்க்கையோடு ஒன்றியிருக்கக்கூடியது வெற்றிலை. நமது வெற்றிலைக்கு என்று சில தனிப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று நாம் நம்பக்கூடியவர்கள். இதனை நம்ப வைப்பதற்கு ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும்.
ஆத்தூர் வெற்றிலைக்கும் மற்ற வெற்றிலைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அதன் காம்புகள் நீளமாக இருக்கும். நீண்ட நாட்கள் காய்ந்து போகாமல் இருக்கும்.
பனங்கருப்பட்டி, மக்ரூனுக்கும்...
தமிழகம் முழுவதும் பல்வேறு பழமையான பொருட்கள் கிடைக்கிறது. இதனையும் கண்டுபிடித்து அதற்கான அங்கீகாரத்தையும் நீங்கள் பெற்றுத்தர வேண்டும். தமிழ்நாட்டில் 59 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. இந்திய நாட்டிலேயே அதிகமாக தமிழ்நாட்டு பொருட்களுக்கு கிடைத்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடலைமிட்டாய், வெற்றிலை ஆகிய 2 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. விரைவிலே பனங்கருப்பட்டி, மக்ரூனுக்கு கிடைக்கும் என்று உறுதி தந்திருக்கிறார்கள். அடுத்ததாக விளாத்திகுளம் மிளகாய்க்கும் குறியீடு கிடைக்கும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரபு, தமிழக அரசின் புவிசார் குறியீடு பதிவு ஒருங்கிணைப்பு அலுவலர் ப.சஞ்சய் காந்தி, ஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.சதீஷ் மற்றும் திரளான வெற்றிலை விவசாயிகள் கலந்து கொண்டனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.விஜயகுமார் நன்றி கூறினார்.