கட்டுமான பணி மும்முரம்

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு 5 தளங்கள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டிடத்தின் கட்டுமான பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
இடப்பற்றாக்குறை
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இங்கு செயல்பட்டு வந்த பொது சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த கட்டிடம் இன்னமும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் தற்போது அனைத்து வகை சிகிச்சைக்கும் போதுமான இடமின்றி சிரமப்படும் நிலை உள்ளது. அறுவை சிகிச்சை அரங்குகளும் குறைவாக இருப்பதால் சுழற்சி முறையில் அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. சிகிச்சையில் குறை இல்லாத போதும், இடப்பற்றாக்குறை இருப்பது சிகிச்சை பெறுவோருக்கும், சிகிச்சையளிக்கும் டாக்டர்களுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் கட்டுமான பணி நடந்து வரும் புதிய கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கட்டுமான பணி மும்முரம்
இதையடுத்து தற்போது 5 தளங்களுடன் அமைந்துள்ள புதிய மருத்துவமனை கட்டிடத்தின் கட்டுமான பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த கட்டிடத்தில் புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள் சிகிச்சை பிரிவு, பெண்கள் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை உள்பட பல்வேறு பொது சிகிச்சைக்கான வார்டுகள் அமைகின்றன. மேலும், இந்த கட்டிடத்தில் சுமார் 10 அறுவை சிகிச்சை அரங்குகளும் அமைய உள்ளது. இதனால் இந்த கட்டிடம் திறக்கப்பட்டால் தற்போதுள்ள இடப்பற்றாக்குறை முற்றிலும் தவிர்க்கப்படும்.
மேலும், ஒவ்வொரு நோயாளிகளும் தாமதமின்றி விரைவான சிகிச்சை பெற முடியும். தற்போது கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. கட்டிடத்தின் சுற்றுப்புற வளாகத்தை அலங்கரிக்கும் பணியும் நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் இதன் திறப்பு விழா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.