6 வயது சிறுமியை கத்தியால் குத்திய தாய்
தேவகோட்டையில் பெற்ற மகளையே தாய் கத்தியால் குத்தி, தானும் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவகோட்டை,
தேவகோட்டையில் பெற்ற மகளையே தாய் கத்தியால் குத்தி, தானும் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கத்தியால் குத்தினார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தண்ணீர் பந்தலார் வீதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி வனிதா(வயது 26). இவர்களுக்கு கவிதா(6) என்ற மகள் உள்ளாள். முருகன் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். கவிதா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் கவிதா தனது தாயுடன் வீட்டில் இருந்தாள். முருகன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் வீட்டில் இருந்த வனிதா, திடீரென சாமி வந்தவர் போல் ஆடினார். இதனால் பயந்து போன கவிதா அழுதுள்ளாள். அப்போது வனிதா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மகள் கவிதாவின் தலையில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்தம் கொட்டியதில் வலியால் அவள் அலறி துடித்தாள். கவிதாவை வெளியே விடாமல் வனிதா வீட்டிற்குள்ளேயே வைத்துள்ளார். மேலும் வனிதா தானும் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.
போலீசார் விசாரணை
மாலையில் வேலை முடிந்து முருகன் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது, தலையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட தனது மகள் வலியால் அழுது கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காயம் அடைந்த வனிதாவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் வனிதா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெற்ற மகளையே தாய் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.