சென்னை விமான நிலையத்தில் ரூ.59 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.59 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 275 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இலங்கையை சேர்ந்த 3 பெண்களை கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த பாத்திமா ரபியா (வயது 25), பாத்திமா நவியா (24), பாத்திமா ஆப்ரா (26) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
ரூ.59 லட்சம் தங்கம்
ஆனால் அதில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது 3 பேரும் தங்கள் தலை மூடி பேண்ட் மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
3 பேரிடம் இருந்தும் ரூ.59 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 275 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பெண்களையும் கைது செய்தனர். மேலும் இந்த தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? எனவும் விசாரித்து வருகின்றனர்.