கோத்தர் இன மக்கள் பேரணி

கோத்தகிரியில் உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோத்தர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பேரணி நடத்தினர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோத்தர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பேரணி நடத்தினர்.
உழவர் சந்தை
கோத்தகிரி கடைவீதி பகுதியில் ஏற்கனவே அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட உழவர் சந்தை பயன்படுத்தப்பட வில்லை. இதனால் மார்க்கெட் திடலுக்கு எதிரே நேரு பூங்கா வளாகத்தை ஒட்டி உள்ள 60 கடைகளை அகற்றி விட்டு, ஒரு ஏக்கர் பரப்பளவில் புதிய உழவர் சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு வியாபாரிகள், கோத்தர் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் உழவர் சந்தையை வேறு பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று புதுகோத்தகிரியை சேர்ந்த கோத்தர் இன மக்கள் உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6 கிலோ மீட்டர் பேரணி நடத்தினர். இதற்கு ஊர்த் தலைவர் மந்தோ சுப்பிரணி தலைமை தாங்கினார். புது கோத்தகிரியில் இருந்து பாண்டியன் பூங்கா, பஸ் நிலையம், மார்க்கெட் திடல் வழியாக காமராஜர் சதுக்கத்தை அடைந்தனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவர்கள் பாரம்பரிய உடையணிந்து பதாகைகள், கருப்பு கொடிகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். பின்னர் நேரு பூங்காவில் உள்ள பழமை வாய்ந்த தங்களது பூர்வீக அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதுகுறித்து ஊர்த் தலைவர் மந்தோ சுப்பிரமணி கூறியதாவது:-
நேரு பூங்கா வளாகத்தில் எங்களது பூர்வீக கோவிலான அய்யனோர் அம்மனோர் கோவில் அமைந்துள்ளது. நகரின் வளர்ச்சிக்காக நேரு பூங்கா வளாகத்தில் 1.08 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அங்கு உழவர் சந்தை அமைக்கப்பட்டால், எங்களது கலாச்சாரம் மற்றும் கோவிலின் புனித தன்மை கெட்டு விடும் அபாயம் உள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர், ஜனாதிபதி ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பி உள்ளோம். கோத்தகிரி என்பது கோத்தர்கள் வாழ்ந்த மலை ஆகும். வளர்ச்சி பணிகளால் எங்களது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அடையாளமும் காணாமல் போய் விடும். எனவே, நேரு பூங்கா மற்றும் காந்தி மைதானம் உள்ள 6 ஏக்கர் நிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.