அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்

மயிலாடுதுறையில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விபரம் வருமாறு:- அன்பழகன் (தலைவர், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்):- விவசாயத்தை மட்டுமே பிரதானமாக கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி கொண்டு வரவேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் ஒரு ஏக்கர் என்பதற்கு பதிலாக ஒரு எக்டேர் என்கிற அளவில் உதவிகள் வழங்க வேண்டும்.
வரதராஜன்: விளைநிலங்களை சேதப்படுத்தும் கால்நடைகளை தடுக்க அகரவட்டாரத்தில் கால்நடைபட்டி அமைத்து கொடுக்க வேண்டும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான மானியம் வழங்க வேண்டும். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பாரம்பரிய அரிசி ரகங்களை கூட்டுறவுத்துறை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீடு கிடைக்க நடவடிக்கை
குருகோபிகணேசன்: கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடையும் வகையில் காவிரியில் முறைவைக்காமல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். கடந்த ஆண்டு பயிர்காப்பீடு செய்தவர்களுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேஷ்: சீர்காழி கழுமலையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். ஆற்றின் கரைகளை பலப்படுத்தி இருபுறமும் மரக்கன்றுகள் நடவேண்டும்.
ராஜதுரை: கொள்ளிடம் வட்டாரத்தில் அரசு புறம்போக்கு நிலம், குளங்களை தனியாருக்கு பட்டா மாற்றப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. மணல்குவாரிகளில் விதிமுறைகள் மீறி மணல்எடுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வராஜ்: முடிகண்டநல்லூர் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது அதனை தூர்வார வேண்டும்.
அனைவருக்கும் பயிர்க்கடன்
சீனிவாசன்: குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு ரசீது கொடுக்க வேண்டும். பாபு: குத்தாலம் தாலுகாவில் நிலஅளவு பிரிவில் நிலம் அளவீடு செய்வது, பட்டாமாறுதல் குறித்து மனுஅளித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கட்டுமானபணிகளுக்கு கிராம சமுதாய ஒப்புதல் இன்றி மணல் எடுத்துசெல்வதை தடுக்க வேண்டும். ராமலிங்கம்: காவிரி மற்றும் அதன் பாசன ஆறுகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். இதனால் தண்ணீர் பாசனத்திற்கு செல்லாமல் தடைபடுகிறது.
மாவைகணேசன்: காருகுடி-விளாகம் கிராமத்திற்கும், வயல்வெளி பகுதிகளில் டிராக்டர், அறுவடை எந்திரம் சென்றுவருவதற்கும் சாலை வசதி அமைத்துகொடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் அனைவருக்கும் வழங்க வேண்டும் இவ்வாறு விவசாயிகள் பேசினர். கூட்டத்தில் நேர்முக உதவியாளர் நரேந்திரன், வேளாண் இணை இயக்குனர் சேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், கூட்டுறவுத்துறை துணைபதிவாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.