சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

பிரம்மதேசம் அருகே சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரம்மதேசம்:
பிரம்மதேசம் அருகே உள்ள குரூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு கட்டுமான பணிகளுக்காக சிமெண்டு வாங்குவதற்கு டிராக்டரில் திண்டிவனத்துக்கு சென்றார். அப்போது அவர் எடுத்து சென்ற ரூ.25 ஆயிரம் பணம் தவறி கீழே விழுந்து விட்டது. இதனால் பதறிபோன அவர், பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான ஸ்ரீ ராமகிருஷ்ணன்(40) என்பவர் திண்டிவனம் சாலையில் சென்றார். அப்போது அங்கு சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்து, பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் அன்பரசிடம் கொடுத்தாா். இதையடுத்து வேலுவை போலீசார் வரவழைத்தனர். பின்னர் போலீசார் முன்னிலையில் ராமகிருஷ்ணன், அந்த பணத்தை வேலுவிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணனின் நற்செயலை போலீசார் வெகுவாக பாராட்டினர்.